சென்னை: தமிழகம் முழுவதும் ஹிஜாவு, ஆருத்ரா உட்பட 4 நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடம் முதலீட்டுதொகை பெற்று ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்திருந்தது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த தொகையை மீட்டுதருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ஐஜி ஆசியம்மாள் கூறியதாவது: அதிக வட்டித் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் அதிகளவில் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன. முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 25முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று அந்நிறுவனங்கள் ஏமாற்றி உள்ளன.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்ட ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம், கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய ‘ஹிஜாவு’ நிறுவனம், கிண்டியில் செயல்பட்ட ‘எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.’ நிறுவனம், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘எல்பின்’இ.காம் நிறுவனம் ஆகிய 4 நிதி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி நாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவனநிர்வாகிகளைப் பிடித்து கொடுக்க‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது ‘லுக் அவுட்’ நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்கண்ட 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பொது மக்களிடம்ரூ.13 ஆயிரத்து 700 கோடி முதலீட்டுத் தொகை பெற்று மோசடி செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 4 நிதி நிறுவனங்களின் 1,115 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் போன்ற அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். அவர்களது பணத்தை மீட்டு நீதிமன்றம் மூலமாக பெற்று தர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவை வலுப்படுத்த 28உதவி ஆய்வாளர்களை கூடுதலாகபணி நியமனம் செய்து டிஜிபிசைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உதவி ஆய்வாளர்கள் மூலம் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல், மோசடி நிறுவனங்களின் சொத்துகளை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த 4 நிதி நிறுவனங்களில் எல்என்எஸ்-ஐஎப்எஸ் நிதி நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். மீதம் உள்ள 3 நிறுவனங்கள் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படும். இவ்வாறு அவர் கூறினார்.