பொதுத் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் வராதது குறித்த விவாதம் பரவலாக நடந்து வரும் நிலையில், பொதுத் தேர்வுக்கு வராத 50 ஆயிரம் மாணவர்களின் பின்னணி பற்றி இங்கு விரிவாக காணலாம்.
பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று, நான்கு மாதம் வரவில்லை என்றாலே அந்த மாணவர்களின் பெயர், வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தி, டிசி வழங்குவதற்கும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சமீப காலங்களாக, ஒரு மாணவர் எட்டு மாதங்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என்றாலும் கூட, அவரது பெயர் வருகை பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்வதில்லை. கல்வித் துறையின் புள்ளி விவரங்களை கண்காணிக்கக் கூடிய எமிஸ் என்ற இணையதளத்தில் இருந்தும் மாணவர் பெயர் நீக்கப்படுவதும் இல்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையிலர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அப்படியே 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகிறார்கள் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவும், 11 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் அனைவரும் 12 ஆம் வகுப்புக்கு செல்கிறார்கள் என்று காட்டுவதற்காகவும் இதுபோன்ற தவறான செயல்கள் கல்வித் துறையில் அரங்கேற்றப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு ஒருபடி மேலாக, பள்ளிகளுக்கு வராத மாணவர்களால் பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக அளவில் பல நிதி இழப்புகளும், முறைகேடுகளும் நடப்பதாகவும் ஆசிரியர்கள் குமுறுகின்றனர். யோசித்துப்பார்த்தால் பள்ளிகளுக்கு வராத 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன் அந்தப் பாட புத்தகங்களுக்கான செலவுகள், போக்குவரத்து செலவுகள், அந்த மாணவர்களுக்கான கல்வி நலத்திட்ட உதவிகள் எங்கே சென்றது என்ற கோள்வியும் எழுகிறது.
அதேபோல் 50 ஆயிரம் மாணவர்களுக்கும் விடைத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதால் எவ்வளவு பெரிய நிதி இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. மாணவர்களுக்கு பல வகையான கல்வி நிதியுதவி திட்டங்கள், மத்திய மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த கல்வி நிதியுதவி திட்டங்களில், பள்ளிகளுக்கே வராத மாணவர்களுக்கு வழங்காத போது அந்த நிதி எல்லாம் எங்கே போனது, பள்ளிகளுக்கு வராத மாணவர்களின் பெயர்களை, பள்ளிகளுக்கு வருவது போல் ஆவணங்களில் காட்டி அதில் பல முறைகேடுகள் நடைபெறுகிறதா என்ற கேள்வியையும் ஆசிரியர்கள் எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாகவும், 50,000 மாணவர்கள் தேர்வுக்கு வராதது குறித்தும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், “1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகளை வைரஸ் தொற்று காரணமாக மாற்றி வைப்பதற்கான முடிவுகள் தற்போது வரை எடுக்கப்படவில்லை. வைரஸ் தொற்று அதிகரித்தால் சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.
12 ஆம் வகுப்பு தமிழ் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். அதற்கு குடும்ப சூழ்நிலை காரணமா அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமா என்பது குறித்து ஆராயப்படும். அதிகமாக தேர்வு எழுதத் தவறிய மாணவர்கள் உள்ள கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அடுத்து வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வைப்பதற்கான நடவடிக்கையை தீவிரப் படுத்தியுள்ளோம். இப்போது வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு வைப்பது குறித்த முடிவு எடுக்கப்படவில்லை” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM