டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் – ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 18 எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 4-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், அனுராக் தாகூர், கிரண் ரிஜூஜூ, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.