வேலையை விட்டு நீக்கியதற்காக இளைஞர் ஒருவர், அப்பார்ட்மெண்ட்டில் இருந்த கார்களின் மீது ஆசிட்டை வீசி பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகரில் இருக்கும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், வீட்டு உரிமையாளர்களின் கார்களை தினமும் சுத்தம் செய்வதற்கு என்றே, தனியாக ஒருவரை அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கம் வேலைக்கு அமர்த்திருக்கும். இதற்கும் சேர்த்தே, மாதந்தோறும் பராமரிப்பு செலவு என்று ஒன்று வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ஒரு தொகை வசூலிக்கப்படும். அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது ராம்ராஜ் என்ற இளைஞர், நொய்டாவில் உள்ள மேக்ஸ்பிளிஸ் ஒயிட் ஹவுஸ் சொசைட்டியில், கார்களை சுத்தம் செய்யும் பணிகளில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கார்களை தினமும் சுத்தம் செய்து வந்ததுடன், துணிகளை சலவை செய்யும் பணிகளையும் ராம்ராஜ் செய்து வந்துள்ளார். ஆனால் சில காலமாகவே, அந்த இளைஞரின் வேலையில் திருப்தி இல்லாத 15 குடும்பங்கள் மட்டும், அவரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளனர். மற்ற அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் அவர் வேலை செய்வதை தடுக்கவில்லை. எனினும், 15 குடும்பங்கள் மட்டும் தன்னை வேலையை விட்டு நீக்க முடிவு செய்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் ராம்ராஜ், எப்போதும் போல் கடந்த புதன்கிழமை வேலைக்கு வருவதுபோல் வந்துள்ளார். அடுக்குமாடி பாதுகாவலர்களும் அவரை தடுக்கவில்லை.
नोएडा के सेक्टर 75 की Maxblis White House society में कार सफाई का पैसा ना मिलने से नाराज कार क्लीनर ने 14 कार पर डाला तेजाब,पूरी घटना सीसीटीवी में कैद @Uppolice @noidapolice pic.twitter.com/0VUQSCrcvJ
— Yusuf (@BagYusuf24) March 17, 2023
பின்னர் பிளாஸ்டிக் பாட்டில் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த ஆசிட்டை குலுக்கி, குடியிருப்பின் அடித்தளத்தில் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் ஒவ்வொன்றின் மீது தெளித்துச் சென்றுள்ளார் ராம்ராஜ். இந்தக் காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவானது. மேலும் அங்கிருந்த அலாரம் ஒலி எழுப்பியுள்ளது. சத்தம் கேட்டு பணியில் இருந்த அடுக்குமாடி பாதுகாவலர்கள் உடனடியாக கார் நிறுத்தும் இடத்திற்கு ஓடி வந்துள்ளனர். அப்போது கார்களின் மீது ஆசிட் தெளித்துவிட்டு, அங்கிருந்து இளைஞர் ராம்ராஜ் தப்பிக்க முயற்சித்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி பிடித்த பாதுகாவலர்கள், வீட்டு உரிமையாளர்களுடன் இணைந்து காவல் நிலையத்தில் ராம்ராஜை ஒப்படைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐ.பி.சி. செக்ஷன் 427-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த நொய்டா போலீசார், ராம்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். தன்னை வேலையை விட்டு நீக்கியதாலேயே கோபத்தில் அவ்வாறு செய்ததாக ஒத்துக்கொண்ட இளைஞர் ராம்ராஜை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். ஆசிட் வீசப்பட்ட 15 கார்கள் சேதடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM