சென்னை: மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கான காவல் வருகை அணிவகுப்பு நேரம் மாற்றம், சென்னை, மதுரையில் தங்கும் விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு காவல் துறை சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார்.
ரூ.8.50 கோடியில் ‘அவள்’ திட்டம்: அதைத் தொடர்ந்து, சென்னை பெருநகரில் உள்ள காவல் சிறார் மன்றங்களை மேம்படுத்துதல், காவல் துறையினருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தொடர்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தற்காப்பு பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கி ரூ.8.50 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் ‘அவள்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், 100 பெண் காவலர்கள் பங்கேற்ற சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 700 கி.மீ. மிதிவண்டி பயணத்தை தொடங்கி வைத்ததுடன், காவல் சிறுவர், சிறுமியர் மன்றங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தொலைக்காட்சி பெட்டிகளையும் முதல்வர் வழங்கினார்.
தொடர்ந்து, பெண் அதிரடிப்படை காவலர்களின் தற்காப்புக்கலை விளக்கம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக வரலாற்றில் முதல்முறையாக பெண்களும் காவலர் ஆகலாம் என்பதை உருவாக்கி, காக்கி பேன்ட்-சட்டை அணிய வைத்து பெண்கள் கையில் துப்பாக்கியையும் ஏந்த வைத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இன்று தமிழகத்தில் 35,329 பெண் காவல் ஆளிநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1973 டிசம்பரில் பெண் காவல் உதவி ஆய்வாளர், பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். அதன் விளைவாக, ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 21 பெண் காவலர்கள் அந்த ஆண்டு டிச.27-ம் தேதி பணியில் சேர்க்கப்பட்டனர்.
முழு மரியாதை தரவேண்டும்: காவல் பணியோடு சேர்த்து குடும்ப பணிகளையும் செய்தாக வேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருப்பதை ஆண் காவலர்கள் உணர வேண்டும். எல்லா நிலையிலும் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு முழு மரியாதை தர வேண்டும்.
சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பில் 37 சதவீதம் பெண் காவல் ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையில் இணைய தொழில்நுட்பத்தை 70 சதவீதம் பெண்கள்தான் செயல்படுத்துகின்றனர். காவல் தொழில்நுட்ப பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள், விரல் ரேகைப் பிரிவில் நஃபிஸ் மற்றும் ஃபேக்ட் 7 எனும் புதிய தொழில்நுட்ப பிரிவிலும் 72 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
பொன்விழா ஆண்டில் பெண் காவலர்களுக்கு 9 சிறப்பான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
> பெண் காவலர்களின் நீண்டநாள் கோரிக்கையான ‘ரோல்-கால்’ எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, காலை 7 மணிக்கு பதில் 8 மணி என மாற்றப்படும்.
> சென்னை, மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.
> அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்காக கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.
> பெண் காவலர்களின் குழந்தைகளுக்காக சில மாவட்டங்களில் காவல் குழந்தை காப்பகம் தொடங்கப்பட்டது. இதை மேம்படுத்த, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும் காப்பகம் அமைக்கப்படும்.
> கருணாநிதி பெயரில் கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
> பெண் காவலர்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும்.
> பெண் காவலர்களுக்கு தனியாக துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு விருது, பரிசுகள் வழங்கப்படும். தேசிய அளவிலான பெண் காவலர் துப்பாக்கி சுடும் போட்டியை தமிழகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
> பெண் போலீஸாரின் தேவைகள், பிரச்சினைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசிக்க ‘காவல் துறையில் பெண்கள்’ எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்படும்.
> பெண் காவலர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்த, டிஜிபி அலுவலகத்தில் ‘பணி வழிகாட்டும் ஆலோசனை குழு அமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.