அதானி குழுமம் தொடர்பாக, கடந்த ஜனவரியில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அதானி குழும பங்குகளின் விலை சரியத்தொடங்க, எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ போன்ற அரசு நிறுவனங்கள், அதானி குழுமத்தில் முதலீடு செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் குறித்து, எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.க-வுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன.
மேலும் இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் குரலெழுப்பிவருகின்றன. இந்த வாரம்கூட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலர், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர்.
இந்த சலசலப்பின் காரணமாக ஐந்து நாள்களாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன், `மோடியும் அமித் ஷாவும், நாடாளுமன்றத்தை இருட்டறையாக மாற்றுகின்றனர்’ என விமர்சித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய டெரெக் ஓ பிரையன் தன் ட்விட்டர் பக்கத்தில், “மோடியும், அமித் ஷாவும் சந்தேகத்துக்குரிய வகையில், நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சாதனை படைத்திருக்கின்றனர். மக்களவையும், மாநிலங்களவையும் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சீர்குலைக்கப்பட்டிருக்கின்றன.
அவர்கள் இருவரும், நாடாளுமன்றத்தை இருட்டறையாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்” என்று சாடியிருக்கிறார்.
முன்னதாக, அரசு நிறுவனங்களில் அதானி வாங்கிய கடன் குறித்த விவரங்களை, ஆர்.பி.ஐ சட்டப்படி வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.