புதுடெல்லி: ‘தேச விரோதிகள் தேச பக்தி பற்றி போதிக்கக் கூடாது’ என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே காட்டமான பதிலடி தந்துள்ளார். லண்டனில் ராகுல் பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராகுலை இந்தியாவுக்கு எதிரான நிரந்தரமான டூல்கிட் என்றும், தேச விரோதி என்றும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நேற்று பதிலடி தந்துள்ளார்.
கார்கே கூறியிருப்பதாவது: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அதானி மோசடி போன்ற முக்கிய பிரச்னைகளை மறைக்கவும், மக்கள் கவனத்தை திசை திருப்பவும் பாஜ கட்சி இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. ஜனநாயகம் பற்றி பேசுபவர், அதன் மீது அக்கறை காட்டுபவர் தேசவிரோதியாக இருக்க முடியாது. அவர்கள் தான் உண்மையான தேச பக்தர்கள். ஆனால், நாட்டின் சுதந்திரத்தில் துளியும் பங்கேற்காமல், ஆதரவு தராமல் இருந்தவர்கள்தான் தேசவிரோதிகள். ஆங்கிலேயர்களுக்காக உழைத்த தேச விரோதிகள் மற்றவர்களுக்கு தேச பக்தி பற்றி போதிக்கக் கூடாது.
அதற்கு பதிலாக அதிலிருந்து அவர்கள்தான் பாடம் கற்க வேண்டும். பிரதமர் மோடி பலமுறை அந்நிய மண்ணில் தாய்நாட்டை அவமதித்துள்ளார். அதற்காக அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ராகுலுக்கு பேச வாய்ப்பு கிடைத்தால், பாஜவினரின் குற்றச்சாட்டு சரியான பதில் தருவார். ஆனால் பாஜவினர் பயப்படுகின்றனர். அதனால் பேச அனுமதிக்க மறுக்கிறார்கள். வேண்டுமென்றே அமளி செய்து நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். இவ்வாறு கார்கே கூறி உள்ளார்.