பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது முதல் நாள் நடைபெற்ற தமிழ்த் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆனது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் மாணவர்கள் தேர்வு வராதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் , அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல்நாள் தேர்வை எழுதவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், 50 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும், அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற விதிகள் இருந்தாலும் கூட, இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள், இனியும் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.