பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்த அதிமுக… பிரச்னை பண்ணுவாரா ஓபிஎஸ்?

AIADMK General Secretary Election: அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சுற்றி கடந்த ஓராண்டு காலமாக பிரச்னைகள் சூழந்து வந்தன. ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமையில் இருந்த அதிமுகவில், ஒற்றை தலைமை வேண்டி கோஷங்கள் எழுந்தன. அந்த ஒற்றை தலைமை யாரின் கீழே என்பதும் பெரும் பரபரப்புகளை உண்டாக்கியது எனலாம். 

இரண்டு பொதுக்குழு கூட்டங்கள்

கடந்தாண்டு ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு பொதுக்குழுவும் இந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் முக்கிய நிகழ்வுகளாக பார்க்கப்பட்டன. இதில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியானதாக அறிவிக்கப்பட்டது மட்டுமின்றி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தார். மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டார். கட்சியும், சின்னமும் யாருக்கு என இரு தரப்பும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து அலுவலகங்களுக்கும் சென்றுவந்தன. 

இதில், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலார் என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதனால், கட்சியும், சின்னமும் எடப்பாடி பழனிசாமிக்குதான் என உறுதியானது. இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என தெரிவித்திருந்தது. 

பொதுச்செயலாளர் தேர்தல்

இந்நிலையில், அதிமுகவில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை (மார்ச் 18) காலை 10 மணி முதல் தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. நாளை மறுதினம், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து, வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20ஆம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெறுதல் மார்ச் 21ஆம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குப்பதிவு மார்ச் 26ஆம் தேதியும், மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதில், வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் அதிமுகவினர், 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, அதிமுகவின் தேர்தல் ஆணையாளரும், அதிமுக துணை பொதுச்செயலாருமான நத்தம் விசுவநாதன், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஆகியோர் அறிவித்துள்ளனர். அதிமுகவின் விதிமுறையின்படி அடிப்படை உறுப்பினற்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தேர்தல் அறிவிப்பு சம்பிரதாயம் என்றும், போட்டியின்றி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாவார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.