வடசென்னையை பொறுத்தவரை 100ல் 40% பணக்காரர்களாக இருந்தாலும் மீதமுள்ள 60% சதவிகிதம் பேர் அன்றாட கூலி வேலைக்குச்சென்று தங்களது வாழ்க்கையை நடத்துகின்ற மக்களும், கடலில் நெடுந்தூரம் சென்று மீன்களை பிடித்து வந்து அதை விற்றுக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொள்ளும் மீனவ மக்களாகிய நடுத்தர மக்களும் வாழ்கின்ற பகுதியாக உள்ளது. இப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்துகின்ற மின்சாரத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் கட்டி வந்தனர்.
தற்பொழுது ஒருசில பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ள நிலையில் மக்கள் தாங்கள் பயன்படுத்திய மின் சேவை கட்டணங்கள் கட்டுவதற்கு மின்துறை அலுவலகத்திற்கு சென்றால் ஒரு கவுண்டரில் மட்டும்தான் கட்டவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. கூட்ட நெரிசலில் காத்திருப்போர் மக்கள் கவுண்டரில் பணியாற்றுவோரிடம் (Cash Collector) கேட்கும் பொழுது,
அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்…
தங்களுக்கு அவசரம் என்றால் நேரடியாக சென்று தனியார் பிரவுசிங் சென்டரில் கட்டிக் கொள்ள வேண்டும். இங்கு வந்து காத்திருந்து எங்களை கத்தக்கூடாது என்று பதில் கூறி திசை திருப்பி விடுகிறார்கள். அப்படி அவர்கள் கூறுகின்றபோது படித்தவர்கள் பிரவுசிங் சென்டரிலோ அல்லது தங்களுடைய செல்போன்களிலோ மின் கட்டணங்களை செலுத்திக் கொள்வார்கள்.
நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்?
மக்களும் இதைக் கேட்டு தனியார் பிரவுசிங் சென்டரில் தாங்கள் பயன்படுத்திய மின் சேவை கட்டணங்களை செலுத்தினால் பிரவுசிங் சென்டரில் ஆன்லைனில் (கூகுள் பே), (போன் பே), (பேடிஎம்) போன்ற ஆப்களின் மூலம் பணத்தை கட்டுகின்றனர். அப்படி செலுத்துகின்ற கட்டணம், ஒருசில சமயத்தில் செலுத்திய கட்டணம் கடையின் உரிமையாளர்களுக்கு திருப்பி (Refund) வந்து விடுகிறது. இதையும் அறியாமல் மக்களும் தாங்கள் மின் சேவை கட்டணம் செலுத்தி விட்டோம் என்ற நம்பிக்கையில் வீடுகளுக்கு திரும்பி சென்று விடுகின்றனர்.
ஆனால் தாங்கள் பயன்படுத்திய மின்சேவை கட்டணம் கட்டிய பிறகும் மாதக்கணக்கில் வராமல் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மறு மாதம் மின் கட்டணம் செலுத்தும் பொழுது சென்ற மாதம் கட்டவில்லை என்றும், அதனுடைய நிலுவைத் தொகை மற்றும் கட்டவேண்டிய தொகைக்கு கூடுதல் தொகையும் சேர்த்து கட்டவேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற அவல நிலைகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் மின்சாரத்துறை அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய கம்ப்யூட்டர்கள் வேலை செய்யவில்லை எனவும், மின்துறை அலுவலகங்களில் மின்சாரம் இல்லை எனவும், ஆகையால் கம்ப்யூட்டர் வேலை செய்யாது நாலைக்கு வாருங்கள் எனவும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
வடசென்னையை பொறுத்தவரை மின்சாரத்துறை அலுவலகங்களில் மின் சேவை கட்டணங்கள் செலுத்தும் இடம் முதல் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் சேவை கட்டணம் செலுத்த வருகின்ற பொதுமக்களில் அதிகமாக வயதானவர்களே வருவதால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலைகள் தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுமெனவும், மின் சேவை கட்டணம் செலுத்தும் இடம் கீழ் தளத்தில் மாற்றவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM