வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (மார்ச் 17) மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் ரோகித் சர்மாவுக்கு பதில் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்ட்யா ஏற்றார். இப்போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி மிட்செல் மார்ஷ், ஹெட் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு துவக்கம் தந்தனர். சிராஜ் பந்தில் ஹெட் (5) போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் (22) வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் அரைசதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார்.
லபுசேன் (15),ஜோஷ் இங்லிஸ் (26), கிரீன் (12) ஆகியோர் தன் பங்கிற்கு ஓரளவு கைகொடுத்தனர். பின்னர் வந்த மேக்ஸ்வெல் (8), ஸ்டோனிஸ் (5), அபாட் (0), ஜாம்பா (0) விரைவில் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவரில் 188 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட், குல்தீப், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement