அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பேசியதாக தகவல் வெளியானது. அவரின் இந்த கருத்துக்கு அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, இதில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணாமலை பேசியதற்கு பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், அண்ணாமலை பேசியது மற்றும் அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அந்த பேட்டியில், அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தொண்டர்களின் விருப்பம். அதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பொது வெளியில் பேசும் கருத்துக்கு பதில் அளிக்கலாம். அவர்கள் கட்சி நபர்களுக்குள் பேசும் கருத்துக்கு பதில் அளிக்க முடியாது.
அண்ணாமலை எது பேசி இருந்தாலும் அது குறித்து கட்சி முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் கூட்டணி. அதிமுக தலைமை ஏற்கும் நபர்கள் கூட்டணிக்கு வரலாம். இது குறித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்வுக்கான தேர்தல் அவசரமாக நடைபெறவில்லை. முறைப்படி சட்டபடி நடைபெறுகிறது. நாங்கள் எதையும் சகித்துவிட்டு செல்லவில்லை.
எங்களுக்கு என்று தனித்தன்மை உள்ளது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழிகாட்டுதல் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை. எங்களை யாரையும் குட்ட விடவும் மாட்டோம் குனியவும் மாட்டோம். நாங்கள் யாரையும் இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அமமுக கம்பனி காலியாக உள்ளது. இன்னும் சிலபேர் இங்கு வந்து சேருவார்கள். அவர்களை அரவனைக்க அதிமுக தயாராக உள்ளது.
ஓபிஎஸ்-க்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தெரியாது. முதலில் அவருக்கு டி.டி. வி தினகரனை தெரியும். பின்னர் சசிகலா தெரியும். அவர்கள் மூலமாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் அவர்கள் குடும்பம் மீது குற்றச்சாட்டு வைத்தார். காலம் கடந்து ஜெயலலிதா மரணம் மீது எந்த ஒரு சந்தேகம் இல்லை என தெரிவித்தார். ஆட்சியில் இருந்த நேரத்தில் தினகரனை சந்தித்தார். இதை எல்லாம் தொண்டர்கள் மறக்க மாட்டார்கள் என்று ஜெயக்குமார் கூறினார்.