சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை – அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (மார்ச் 17) நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்தை பகிர்ந்திருந்தார். “தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்துப் போட்டியிட்டது இல்லை. கூட்டணி வைத்துதான் போட்டியிட்டு உள்ளனர். தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவிக்க முடியாது. கருத்து கூற, கேள்வி கேட்க, பதில் கூற அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது” என அவர் கூறினார்.