வாஷிங்டன்,
சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக சொல்லி வருகிறார். கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு அவ்வபோது நித்யானந்தா பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் 30 நகரங்களை நித்யானந்தா ஏமாற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 30 நகரங்களுடன் கைலாசா பல்வேறு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட், வர்ஜீனியா, டேடன், ஓஹியோ, புளோரிடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் கைலாசாவுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோல பல நகரங்களை கைலாசா ஏமாற்றியுள்ளதாக பாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தால் தற்போது கைலாசாவுடன் ஒப்பந்த நகரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக தெரிகிறது.