திட்டக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க சென்ற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் தகவல் அறிந்து அமைச்சர் கணேசன், திடீரென ஆய்வு மேற்கொண்டதில் , பணியில் இருக்க வேண்டிய 17 மருத்துவர்களில் 2 பேர் மட்டுமே பணியில் இருப்பதையும் , 7 பேர் காலதாமதமாக வந்து செல்வதையும், 8 மருத்துவர்கள் நீண்ட நாட்களாக பணிக்கே வராமல் இருப்பதையும் கண்டுபிடித்தார்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கமான , எனது குப்பை எனது பொறுப்பு என்ற தீவிர தூய்மைபணிகள் குறித்த விழிப்புணர்வு முகாமை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.
அப்போது திட்டக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அமைச்சர் கணேசன் முன்னறிவிப்பின்றி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் முண்டியடித்துக் கொண்டிருப்பதை கண்ட அமைச்சர் கணேசன் அங்கு சென்று நோயாளிகளை வரிசையில் நிற்க வைத்தார்.
2 மருத்துவர்கள் மட்டுமே நோயாளிகளை பரிசோதித்து வந்ததால் காய்ச்சாலுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கால்கடுக்க காத்திருப்பதை கண்டார். இதையடுத்து ஒவ்வொரு வார்டாக சென்று நோயாளிகளிடம் சிகிச்சை மற்றும் சாப்பாடு வழங்கப்படுகின்றதா என்று கேட்டறிந்தார்.
திட்டக்குடி அரசு மருத்துவ மனையில் மொத்தமாக 17 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 2 பேர் மட்டும் பணியில் இருந்த நிலையில் 7 பேர் வருவதற்கு காலதாமதமாகிவிட்டதாகவும், 8 பேர் மருத்துவமனைக்கே வராமல் இருப்பதையும் அமைச்சர் கணேசன் கண்டறிந்து தலைமை மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார்.
அந்த 8 பேரில் இருவர் மருத்துவ விடுப்பு என்று புது புது காரணங்களை சொல்லி தலைமை மருத்துவர் சமாளித்த நிலையில் பணிகே வராமல் இருக்கும் இந்த அலட்சிய அரசு மருத்துவர்கள் குறித்து சுகாதார பணிகள் மாவட்ட இணை இயக்குனரிடம் புகார் அளித்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் கணேசன் எச்சரித்தார்.