இங்குதான் சட்டத்தின் ஆட்சி; ம.பி. பட்டதாரி பெண்ணுக்கும் தமிழகத்தில் தான் பாதுகாப்பு: சபாநாயகர் அப்பாவு பேச்சு

நெல்லை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை சார்பில் பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் விழா பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கார்்த்திகேயன் தலைமை வகித்தார். விழாவில் 105 பெண்களுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் தலா 8 கிராம் தங்கம், ரூ.48 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ95 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உதவித் தொகை வழங்கி சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் முக்கிய காரணங்களாக இருந்தனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகள், மேயர், துணை மேயர் போன்ற பதவிகளில் பெண்கள் அமர்வதற்கு வித்திட்டது, திராவிட இயக்கம். மறைந்த தலைவர் கலைஞர், பெண்கள் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார்.
இதன் மூலம் பெண்கள் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு பிளஸ் 2 என கல்வி அறிவு பெற்றனர். இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

பெண்களுக்கு உயர்கல்வி அளிக்க வேண்டும் என்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதனால் தான் அகில இந்திய அளவில் பட்டப்படிப்பு படித்த பெண்கள் சதவீதம் 34 சதவீதமாக இருந்த போதிலும், தமிழகத்தில் 52 சதவீதமாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டம் பெற்ற பெண், இங்கு வந்து வழக்குத் தொடுத்து தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.

ஜாதி, சமயம் கடந்து எல்லோரும் சமம் என்று சமூக நீதி காக்கும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெண்கள் உரிமைத் தொகை ரூ.1000 பட்ஜெட் கூட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் பி.எம். சரவணன் ஆகியோர் பேசினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.