ஸ்ரீநகர்: பிரதமர் அலுவலக உயரதிகாரி என்று கூறி ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத்தை சேர்ந்த கிரண் பாய் படேலை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த கிரண் பாய் படேல், பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி, காஷ்மீரில் குல்மார்க் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுள்ளார். அவரை அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது காஷ்மீர் மாநில அரசு. உரி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலம் என துணை ராணுவ படையினர் பாதுகாப்புடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளார். இந்நிலையில், அவர் 3வது முறையாக கடந்த 2ம் தேதி மீண்டும் காஷ்மீர் வந்த போது, அவர் மீது சந்தேகமடைந்த கலெக்டர் அளித்த புகாரின் பேரில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் அளித்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.