இரண்டு சினிமா ராவணன்களுக்கு ஒரேநாளில் வெவ்வேறு இடத்தில் நடக்கும் விழா

தமிழ் சினிமாவில் புராண காலத்து ராமன் கதாபாத்திரம் எப்போதுமே திரைப்படங்களில் ஹீரோவாக காட்டப்பட்டு வருகிறது. அதேசமயம் ராவணன் கதாபாத்திரம் வில்லன் தான் என்றாலும் அதையும் நம் தமிழ் படங்களில் ஹீரோயிசம் கலந்து நல்லவனாகவே காட்டி வருகிறார்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் என்கிற டைட்டிலிலேயே ஒரு படம் வெளியானது. கதையம்சமும் கிட்டத்தட்ட நவீன கால ராவணனை பற்றியதுதான்.

அதன்பிறகு தற்போது சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல என்கிற படத்தின் டைட்டிலை பார்க்கும் போது இதுவும் ராவணனின் அம்சமாக உருவாகியுள்ள படம் என்பது தெளிவாக தெரிகிறது. அதிலும் சிம்புவின் கேங்ஸ்டர் கதாபாத்திரம் ராவணனின் குணாதிசயங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகவே சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன்-18) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

அதேபோல மதயானை கூட்டம் என்கிற படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் தற்போது சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள ராவணக்கோட்டம் என்கிற படத்தை இயற்றியுள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டிலிலேயே ராவணன் இடம் பெற்றுள்ளார். படத்தின் கதையம்சத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் நிச்சயமாக ராவணனின் குணாதிசயங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவும் இன்று (ஜூன் 18) மாலை துபாயில் நடைபெறுகிறது. இப்படி ராவணனின் அம்சங்களைக் கொண்டு ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இரண்டு படங்களின் இசை வெளியீட்டு விழா ஒரே நாளில் நடப்பது ஆச்சரியமான ஒன்றுதான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.