தினமும் இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு கால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகலாம் என்று, ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் 200 மில்லியன் மக்களுக்கு பெரிஃபெரல் ஆர்ட்டெரி (Peripheral artery) எனப்படும் கால் தமனிகளில் அடைப்பு ஏற்படும் பாதிப்பு உள்ளது. கால் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் ஷுவாய் யுவான் நடத்திய ஆய்வில், இரவில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு பெரிஃபெரல் ஆர்ட்டெரி ஏற்படுவதற்கு 74% வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்களை விட, ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு இந்த நோய்க்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதியில், ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான தூக்கம்தான் இந்த நோய்க்கு காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பகல் நேர உறக்கத்தை தவிர்ப்பவர்களை விட, பகலில் தூங்குபவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 32% உள்ளது. இருப்பினும் இந்த நோய்க்கும் பகல் நேரத்தில் தூங்குவதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்பது அறியப்படவில்லை.
எனவே, ஐந்து மணி நேரத்திற்கு மேல் தூங்கும் வகையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு, சுறுசுறுப்புடன் உடற்பயிற்சி மேற்கொண்டு, நல்ல உணவுகளை உட்கொண்டால் இந்த நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், அதிகப்படியான தூக்கம் இந்த நோயை குணப்படுத்துமா என்பது தெரிவிக்கப்படவில்லை. அதிக நேரம் தூங்குவது, பகல் நேரத்தில் தூங்குவது போன்றவற்றிற்கும் இந்த நோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்பதும் விளக்கப்படவில்லை. இதுபற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும் என ஆய்வாளர் ஷுவாய் யுவான் தெரிவித்துள்ளார்.