அரியலூரில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயரை சூட்டிவிட்டால், நீட் தேர்வு குறித்தான பிரச்சனை முடிந்து விட்டதாக தமிழக அரசு நினைக்கிறது. இது கண்டனத்துக்குரிய விவகாரம் என்று, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது, “தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆவின் பால் விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
பிரச்சனைக்கு தீர்வு காணாமல் அடுத்தவர் மீது அமைச்சர் குறை சொல்லிக் கொண்டிருப்பதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
நீட் தேர்வு விவகாரத்தில் அரியலூரில் ஒரு கட்டிடத்திற்கு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயரை வைத்து விட்டால், நீட் தேர்வு பிரச்சனை முடிந்துவிட்டது என்று தமிழக அரசு நினைக்கிறது.
இது நிச்சயமாக கண்டனத்துக்குரிய விவகாரம். ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால், ஒரு கட்டிடத்திற்கு பெயரை சூட்டுவதும், சிலையை திறந்து வைப்பதும் இவர்களின் வழக்கமாக உள்ளது.
இப்படி செய்வதால் அந்த பிரச்சனை உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று தமிழக அரசு நினைக்கிறது. இது வெறும் கண்தொடைப்பு நாடகம்தான்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.