கதறும் பெற்றோர்: சிவகங்கை அருகே ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழப்பு.. சோகத்தில் மூழ்கிய கிராமம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் படமஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் மூழ்கி 3 சிறார்கள் உயிரிழந்தனர். புதுக்கோட்டை சிவகங்கை எல்லை பகுதியில் சிவகங்கைக்கு உட்பட்டது உலகம்பட்டி கிராமம். இந்த உலகம்பட்டி கிராமத்தில் நாகராஜன் அவரது சகோதரர் லட்சுமணன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகராஜன் என்பவரது மகள் யாழினி என்ற மீனாட்சியும் (10), லட்சுமணன் என்பவரது மகன்களான மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய மூன்று பெரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்ற சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் சிறுவர்களின் உடல்கள் குளத்தின் நீரில் மிதந்துள்ளது.

இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்து உலகம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உலகம்பட்டி காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து மிதந்த  சிறார்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூர் ஆய்விற்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளது அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உலகம்பட்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.