கொல்கத்தா: காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் கொல்கத்தாவில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரம்காட்டி வருகிறது. இந்த சூழலில் மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் அல்லாத புதிய தேசிய அணியை உருவாக்குவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதிய தேசிய அணி தொடர்பாக ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக்கை வரும் 23-ம் தேதி முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேச உள்ளார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேசவும் மம்தா திட்டமிட்டிருக்கிறார். தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸுக்கு எதிராக அரசியல் நடத்தி வரும் அந்த மாநில முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் அடுத்த வாரத்தில் மம்தாவை சந்தித்துப் பேச இருக்கிறார்.