காங். தன்னை எதிர்க்கட்சிகளின் ‘பிக் பாஸ்’ என்று கருதக் கூடாது: திரிணாமுல் கருத்து; மூன்றாவது அணிக்கான வியூகங்கள் தொடங்கியது

டெல்லி: கொல்கத்தாவில் மம்தாவை அகிலேஷ் யாதவ் திடீரென சந்தித்த நிலையில், காங்கிரஸ் தன்னை எதிர்கட்சிகளின் பிக் பாஸ் என்று கருதக் கூடாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது. அதனால் மூன்றாவது அணிக்கான வியூகங்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் முடக்கிய நிலையில், எதிர்கட்களின் வரிசையில் உள்ள சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள், ‘நாடாளுமன்றத்தை செயல்பட அனுமதியுங்கள்’ என்று கோரிக்கையை விடுத்துள்ளன.

காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் அவ்வப்போது சந்தித்து ஆளும் பாஜகவுக்கு எதிராக வியூகங்களை வகுத்து வந்தாலும் கூட, சில எதிர்கட்சிகள் அவ்வப்போது காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன. ராகுல்காந்தி விவகாரத்தில் சில எதிர்கட்சிகளின் போக்கு வேறு விதமாக திசை திரும்பியதால் தேசிய அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்தான் ஆளும் பாஜகவுக்கு கடைசி முழு பட்ஜெட் கூட்டத் தொடராக அமைந்துள்ளது.

அதனால் மக்களவை தேர்தலை மையப்படுத்தி அரசியல் நகர்வுகளும் தொடங்கிவிட்டன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பல கட்சிகள், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. அந்தப்பட்டியலில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், ெதலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் அணி) சிரோன்மணி அகாலி தளம் போன்ற கட்சிகளை குறிப்பிட முடியும். இவற்றுடன் பாஜகவையும், காங்கிரசையும் கடுமையாக எதிர்க்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மக்களவை தேர்தலை மையப்படுத்தி தேசிய அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்குவங்க முதல்வரும்  திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் உள்ள காளிகாட் இல்லத்தில் சந்தித்தார். அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்  தொடர்பாளர் சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில், ‘அடுத்தாண்டு நடைபெறும்  மக்களவைத்  தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். திரிணாமுல் காங்கிரசை பொருத்தமட்டில் பலமான மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

வரும் 23ம் தேதி பிஜு ஜனதா தள தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கை மம்தா பானர்ஜி  சந்திக்கவுள்ளார். அதேநேரம் காங்கிரஸ்  கட்சியிடம் இருந்து நாங்கள் விலகி இருப்போம். இன்றைய சந்திப்பின் போது,  மூன்றாவது அணி அமைப்பது பற்றி பேசவில்லை. காங்கிரஸ் கட்சி தன்னை  எதிர்க்கட்சிகளின் ‘பிக் பாஸ்’ என்று கருதக் கூடாது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய மற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதே எங்களின் முக்கிய திட்டமாக இருக்கும். வாஜ்பாய் ஆட்சி காலத்தின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் அங்கம் வகித்தது.

பாஜகவின் ‘சி டீம்’ போன்று காங்கிரஸ் செயல்படுகிறது. மாநில  கட்சிகளுக்கு காங்கிரஸ் மரியாதை அளிக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் இருந்து சமமான இடைவெளியுடன் நாங்கள் பயணிக்கிறோம். அதுவே எங்களது நிலைப்பாடு’ என்றார். எனவே திரிணாமுல் – சமாஜ்வாதி கட்சித் தலைவர்களின் திடீர் சந்திப்பானது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்காத எதிர்கட்சிகள் (ஆம்ஆத்மி, திரிணாமுல், சமாஜ்வாதி, சிரோன்மணி போன்றவை), பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்காத எதிர்கட்சிகள் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,

பிஜூ ஜனதா தளம் போன்றவை) என்று இரு பட்டியலிலும் உள்ள தலைவர்களையும் ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இவர்களது ஆலோசனையின்படி பார்த்தால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு பின்னர் காங்கிரசுடன் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவும், அதற்கு முன் காங்கிரசில் இருந்து விலகி இருப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே மூன்றாவது அணிக்கான வியூகங்கள் தொடங்கப்பட்டாலும், அவை முழுவதும் காங்கிரசை மையப்படுத்தி இருக்காது என்பது ெதளிவாகியுள்ளது.

அரசியலில் கைதேர்ந்த பாஜக
காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசிதரூர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்திய ஜனநாயகத்தில் மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என்று ராகுல்காந்தி பேசவில்லை. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறும் அளவிற்கு அப்படி எதுவும் பேசவில்லை. தேசத்திற்கு எதிராக அவர் பேசியதாக நான் கருதவில்லை. அரசியல் செய்வதில் பாஜகவினர் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். ராகுல்காந்தி மீது வலுக்கட்டாயமாக குற்றம் சாட்டி, அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகின்றனர். நாட்டில் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னைகள் நிறைய உள்ளன. ஆனால் அதில் யாரும் கவனம் செலுத்தவில்லை’ என்றார்.

பட்நாயக் கையில் அடுத்த நகர்வு
மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சமாஜ்வாதி கட்சிக்கு அடித்தளம் இல்லை. உத்தரபிரதேசத்தில் மம்தாவுக்கு அடித்தளம் இல்லாத நிலையில், அகிலேஷ் யாதவின் அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி உத்தரபிரதேசத்தில் பிரசாரம் செய்தார். உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் அல்லது சமாஜ்வாதி கட்சியுடன் பயணிக்க முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தயாராக இல்லை.

அதனால் அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம், மேற்குவங்க மாநிலங்களில் பிளவுபட்ட எதிர்க்கட்சிக்கு எதிராக பாஜக களம் காணும். விரைவில் மம்தா பானர்ஜி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்க உள்ளதால், அவரது நகர்வை பொறுத்தே மூன்றாவது அணியின் வியூகம் இருக்கும். இதேபோல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் – மம்தா சந்திப்பு விரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மவுனம் கலைத்த அமித் ஷா
அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் நிலையில், ராகுல்காந்தி பேசிய  கருத்துகளை முன்வைத்து ஆளும் பாஜக நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அதானி குழும விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

அதானி குழும விஷயத்தில் தவறு ஏதேனும் நடந்திருந்தால், யாரையும் விட்டுவைக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் யாரிடமாவது இருந்தால், அவர்கள் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 2024 தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். 303 இடங்களில் ெவற்றி பெறுவோம். பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராவார்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.