ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே கீழ்தேனூரில் பழுதடைந்த மின் மாற்றியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் மதுரா கீழ்தேனூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு தியாகதுருகம் மின் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்தேனூர்-தியாகதுருகம் செல்லும் சாலை அருகே 100 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றியில் இருந்தே விவசாய மின் மோட்டார் மற்றும் வயல்வெளி பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மின்மாற்றி பழுதடைந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் சரி செய்யப்படவில்லை. மேலும் சரி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட மின்மாற்றியை, சரிசெய்து மீண்டும் கொண்டு வந்து அமைக்கப்படாமல் உள்ளனர்.
இதனால் உரிய காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகளும், அத்தியாவசிய தேவைக்கு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இப்பகுதியில் தண்ணீரின்றி விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என இக்கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைத்து அப்பகுதியில் சீரான மின்சாரத்தை விநியோகம் செய்திட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.