குஜராத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கலோல் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஃபதேசின் சவுகான்,”பெற்றோரின் அனுமதியின்றி நடைபெறும் காதல் திருமணங்கள் மாநிலத்தில் குற்ற விகிதத்தை அதிகரிக்கின்றன. அத்தகைய திருமணங்கள் பெற்றோரின் கையெழுத்துடன் பதிவு செய்யப்பட்டால், குற்ற விகிதம் 50 சதவிகிதம் குறையும். ஏனென்றால் காதல் திருமணங்கள் அந்தந்தப் பகுதியிலல்லாமல், மற்ற மாவட்டங்களில் பதிவு செய்யப்படுகின்றன.
எனவே, தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தி, காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். சமூக விரோதிகளால் சிறுமிகள் ஈர்க்கப்பட்டு கடத்தப்பட்ட பல வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அவர்களை காப்பாற்ற சட்டத்திருத்தம் அவசியம். இந்து திருமணச் சட்டத்தில் காதல் திருமணங்கள் தொடர்பான சட்டத்தில் போதுமான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சிறிது காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்” எனப் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெனி தாக்கூர் (Geni Thakore) , “காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் பெற்றோரின் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்தினால் பெண்கள் எதிர்காலத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக மாட்டார்கள். நாங்கள் காதல் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் திருமணத்துக்கு பெண் கிடைக்காத அல்லது குற்றப் பின்னணி கொண்ட ஆண்கள் பெண்களைக் கவர்ந்து அவர்களைத் திருமணம் செய்து கொள்ளாதபடி, மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறோம். இதனால் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்” எனப் பேசியிருக்கிறார்.