ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் வேலையைச் செய்து வரும் கதாநாயகன் விஜய் சிவன், மனைவி, இரண்டு குழந்தைகள், அதீத குடிப்பழக்கம் உள்ள தந்தை ஆகியோருடன், ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மது அருந்தாமலேயே போதை ஆகும் அரிய வகை நோய் அவருக்கு ஏற்படுகிறது. அதனால் அவரின் வேலையே பறிபோய், பொருளாதார சிக்கலில் மாட்டுகிறார். அச்சிக்கலிலிருந்து மீண்டாரா, அந்த அரிய நோய் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்னைகளை உண்டாக்குகிறது, அதை எவ்வாறு கையாள்கிறார் என்பதைக் கலகலப்பாக ஒரு திரைக்கதை அமைத்துச் சொல்லியிருக்கிறார்கள் எழுத்தாளர் ஶ்ரீகுமாரும் இயக்குநர் டி.பிரகாஷும்.
அறிமுக நாயகனான விஜய் சிவன், அப்பாவி குடும்பஸ்தனின் பாத்திரத்தில் பக்காவாகப் பொருந்திப்போகிறார். எந்த இடத்திலும், அதிரடி கதாநாயகனாகவோ அதிமேதாவி கதாநாயகனாகவோ அவதாரம் எடுக்காமல், கடைசி வரை சாமானியனாகவே வந்துபோகிறார். உயர் அதிகாரிகளிடம் பணிவது, மனைவியிடம் ஏவல் விடுவது, இயலாமையில் அழுவது, குடிகார தந்தையிடம் மல்லுக்கட்டுவது என எல்லா தருணங்களிலும் குறைவில்லாமல், தன் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நடுத்தர வாழ்க்கையில், நலிந்த பொருளாதாரத்தால் சிக்கித்தவிக்கும் ஒரு பெண்ணாக சாந்தினி தமிழரசன் தன் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். வழக்கமாக சினிமாவில் காட்டப்படும் நடுத்தர வர்க்க மனைவி கதாபாத்திரம்தான் என்றாலும், மிகை நடிப்போ, போலித்தன்மையோ இல்லாமல் வருகிறார். கதாநாயகனின் தந்தையாக வரும் சுரேஷ் சக்கரவர்த்தி, முதல்பாதி முழுவதும் அட்டகாசம் செய்திருக்கிறார். அவர் போதையில் செய்யும் சேட்டைகளும், காலையில் போதை தெளிந்த பின் கதாநாயகனைப் படுத்தும் பாடும் கலகலப்பிற்கு உத்தரவாதம். இடைவேளையில் ஒரு ரகளையான ட்விஸ்டைக் கொடுத்து, இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார்.
நமோ நாராயணன், ஹானஸ்ட் ராஜ், கதிரவன் ஆகியோர் அடங்கிய காமெடி கூட்டணி, இரண்டாம் பாதி முழுவதையும் தன் தோளில் தாங்கியிருக்கிறது.
நடுத்தர குடும்பத்தின் பொருளாதார சிக்கல், ஏடிஎம் பணம் நிரப்பும் நடைமுறை, நிறுவனம் தரும் பணிச் சுமை, அழகான குழந்தைகள், சேட்டைக்கார அப்பா என நிதானமாகச் செல்கிறது முதற்பாதி. குடிக்காமல் போதையாகும் அரிய நோய் கதாநாயகனுக்கு ஏற்பட்ட பிறகு, கதாநாயகன் மட்டுமின்றி, குடும்பம், சுற்றத்தார் என எல்லாரும் அல்லோல கல்லோலப்படுகிறார்கள். முதற்பாதி திரைக்கதையில் சில இடங்கள் தோய்வைத் தந்தாலும், அந்தப் புதிய நோய் மீதான ஆர்வம் ஓரளவிற்கு அதைச் சரிக்கட்டுகிறது.
இரண்டாம் பாதி முழுவதும், குடிகார சங்கத் தலைவராக வரும் நமோ நாராயணனையும் அவரின் கூட்டாளிகளையும் நம்பியே பயணிக்கிறது. ரவுடி, ஈவென்ட் மேனேஜர், ஃபுட் டெலிவரி பாய் என பலதரப்பட்டவர்களிடம், கதாநாயகனும் நமோ நாராயணன் கூட்டணியும் விதவிதமான சேட்டைகள் செய்து சிரிப்பை வர வைக்க முயல்கிறார்கள். பல இடங்களில் எதார்த்தமாக அமையும் காமெடி கவுன்ட்டர்கள் கைத்தட்டலைப் பெற்றாலும், சில இடங்களில் மொக்கை வாங்குவதையும் தவிர்க்க முடியவில்லை. அவ்வாறான காட்சிகளின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம்.
முட்டாள் தலைவன், அவனுடன் சுற்றும் முட்டாள் கூட்டாளிகள், இவர்களின் உதவியை நாடும் கதாநாயகன் என்ற கான்செப்ட் நாம் பார்த்துப் பழகிய ஒன்றுதான் எனும்போது, இன்னும் நேர்த்தியாக திரைக்கதையமைத்து, ரகளையான காமெடிகளை அதில் இணைத்திருக்கலாம். முதற்பாதியில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் கதாநாயகனின் நோய், இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் மட்டும்தான் வருகிறது. இதனால், ஒரு விநோத நோய் குறித்த தனித்துவமான காமெடி திரைப்படம் என்ற தளத்திலிருந்து விலகி, ஒரு சாதாரண காமெடி திரைப்படமாகச் சுருங்கிவிடுகிறது.
நிறையத் துணை கதாபாத்திரங்களைத் திரைக்கதையில் கச்சிதமாகப் பயன்படுத்தியதோடு, அக்கதாபாத்திரங்கள் வழியாகச் சிரிப்பிற்கும் கேரன்ட்டி தந்திருக்கிறார் எழுத்தாளர் ஶ்ரீகுமார்.
ஒளிப்பதிவில் மெய்யேந்திரன் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். படத்தொகுப்பில் ஷிபு நீல் பிஆர் இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தனூஜ் மேனன் இசையில் முதற்பாதியில் வரும் பாடல்கள் தொந்தரவில்லாமல் வந்து போகிறது. இரண்டாம் பாதியில் வரும் மதுபான விடுதி பாடல் நன்றாக இருந்தாலும், திரைக்கதைக்குத் தடையாகவே இருக்கிறது. பின்னணி இசைக்கு இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். கேட்டுப்பழகிய காமெடி ட்ராக்குகளின் பின்னணி இசையே இரண்டாம் பாதி முழுக்க நிறைந்திருக்கிறது.
வித்தியாசமான நோய், காமெடிதான் டார்கெட் என்று களமிறங்கியவர்கள் அதிலிருந்து விலகாமல் இன்னமும் சுவாரஸ்யமாகக் கதை சொல்லியிருந்தால் இந்த `குடிமகான்’ இன்னும் ரகளைச் செய்திருப்பான். இருப்பினும் இப்போதும் ஈர்க்கவே செய்கிறான்.