குமரி: “விவேகானந்தரின் லட்சிய உணர்வை அனுபவித்து உணர்ந்தேன்" – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்திருந்தார். நேற்று முன்தினம் கொச்சி வந்த அவர், கப்பற்படையின் ஐ.என்.எஸ் துரோணாச்சார்யா கப்பலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் மாதா அம்ருதானந்தமயி தேவியை சந்தித்தார். இன்று திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் காலை 9 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தை வந்தடைந்தார்.

அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி கலெக்டர் ஸ்ரீதர், கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் ஆகியோர் வரவேற்றனர். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் கடற்கரை படகு குழாமுக்குச் சென்ற அவர், படகு மூலம் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்குச் சென்றார்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

அங்கு கன்னியாகுமரி பகவதி அம்மனின் கால்தடம் பதிந்திருக்கும் ஸ்ரீபாதபாறை, விவேகானந்தர் உருவச்சிலை ஆகியவற்றை வழிபட்டார். பின்னர் தியான மண்டபத்துக்குச் சென்றார். மேலும் விவேகானந்தர் நினைவிடத்தில் நின்றிருந்தவாறே 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்தார்.

விவேகானந்தர் நினைவிடத்தில் உள்ள பயணிகள் குறிப்பேட்டில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு எழுதிய குறிப்பில், “கன்னியாகுமரியின் சிறப்பு அடையாளமான விவேகானந்தர் நினைவுச் சின்னம், எனக்கு பிரமிக்கவைக்கும் ஆச்சர்ய அனுபவமாக இருந்தது.

படகில் பயணித்த குடியரசுத் தலைவர்

ஆன்மீகம் நிறைந்திருக்கும் இந்த நினைவுச்சின்னத்தை உருவாக்க காரணமாக இருந்த ஏக்நாத்ராணடேஜி-யின் உயர்ந்த உள்ளத்தைக்கண்டு நான் ஆச்சர்யப்படுகிறேன்” என குறிப்பிட்டார். அதன் பின்னர் படகு மூலம் கரை திரும்பிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு காரில் விவேகானந்தா கேந்திரா-வுக்குச் சென்றார். அங்கு அவரை விவேகானந்தா கேந்திரா நிர்வாகி பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

குடியரசுத் தலைவர்

விவேகானந்தா கேந்திராவில் உள்ள ராமாயண தரிசன கண்காட்சி-யை பார்த்தவர், பாரதமாதா கோயிலில் சென்று வழிபட்டார். பின்னர் அங்குள்ள பயணிகள் குறிப்பேட்டில், “சுவாமி விவேகானந்தர் அனுபவித்த புனிதமான லட்சிய உணர்வையும், அவருக்கு கிடைத்த அருளையும் நான் அனுபவித்து உணர்ந்தேன். சுவாமி விவேகானந்தரின் கொள்கை, செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற விவேகானந்தா கேந்திராவைச்சேர்ந்த அனைவரையும் பாராட்டுகிறேன்” என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு குறிப்பிட்டிருந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து திருவனந்தபுரம் பிறப்பட்டுச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.