நெல்லை பாளையங்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசியவர், ”பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைமை சொல்வதே நிர்வாகிகளின் இறுதி முடிவு. அதனால் அ.தி.மு.க கூட்டணி தொடர்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லியிருப்பது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும்.
தமிழகத்தில் பெரிய கட்சிகள் எதுவும் இதுவரையிலும் தனித்துப் போட்டியிட்டது கிடையாது. கூட்டணியில் தான் அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. அதனால் கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசியதற்கு விளக்கம் கூற விரும்பவில்லை. அண்ணாமலை கருத்துக்கு சிலர் வரவேற்புத் தெரிவித்தது குறித்துக் கேட்கிறீர்கள். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது.
நான் கட்சியில் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்வது சரியல்ல. நான் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். நெல்லை மாநகராட்சியில் நடப்பது தி.மு.க-வின் உள்கட்சி பிரச்னை. அதனால் அது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.