மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பதில் ஏற்பட்ட சர்ச்சையால் அமைச்சரின் ஆதரவாளர்கள் எம்பி யின் வீடு மற்றும் கார் உள்ளிட்டவற்றை தாக்கினார்கள். இப்ப பிரச்சனையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் கே.என் நேரு இன்று எம்.பி திருச்சி சிவா வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் வந்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதல் குறித்து அறிந்த அமைச்சர் கே என் நேரு இன்று மாலை 6 மணிக்கு திருச்சி எம்பி சிவா வீட்டில் நேரில் வந்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த பிறகு அரசு தொடர்பான பல நிகழ்வுகள் இருந்தது. எந்த ஊரில் என்ன நிகழ்வு என்பது கூட எனக்கு தெரியாது மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகர ஆணையர், மேயர் சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை அழைக்கும் இடத்திற்கு நான் செல்வது வழக்கம். அப்படி என்னை அழைத்த போது நான் சென்ற ராஜா காலனி பகுதியில் இறகு பந்து விளையாட்டு மைதானம் திறக்க வேண்டும் என்று கூறினார்கள் எந்த இடத்தில் என்பது கூட எனக்கு தெரியாது. நம்முடைய தொகுதி என்று நான் வந்தேன். இங்கு இருக்கக்கூடிய ஒரு சிலர் எங்களுடைய அண்ணனுடைய பெயரை போடாமல் நீங்கள் எப்படி வரலாம் என்று கேட்டபோது நான் அவர்களை பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை போய் பாருங்கள் நான் என்ன செய்வேன் என்று கூறிவிட்டு சென்றேன்.
அதற்குப் பிறகு நடக்க கூடாத சில விஷயங்கள் அதிலும் கழக குடும்பத்திற்குள் கழகத்தில் இருக்கக்கூடிய ஒருவருடைய வீட்டில் நடந்துள்ளது. அதில் என்னுடைய துரதிஷ்டம் என்னவென்றால் கருப்பு கொடி காட்ட வந்தவர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றி செல்வதற்காக வேனை குறுக்கே நிறுத்தி வைத்ததால் என்னுடைய வாகனம் பின்னால் சிக்கியதால் நடக்கக்கூடாதவை நடந்து விட்டது. இந்த சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது நான் நேரடியாக தஞ்சை மாவட்டம் பூதலூருக்கு நிகழ்ச்சிக்காக சென்று விட்டேன். இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதாக நான் அங்கு இருக்கும்போது எனக்கு தகவல் வந்தது, அதோடு காவல் நிலையத்திற்கு சென்று காவல் நிலையத்திலும் நடந்த சம்பவங்களை குறித்து என்னிடம் கூறினார்கள். நான் நிகழ்ச்சிக்கு வரும் என்று கூட எம்பி சிவா வீட்டில் இருக்கிறாரா என்று நான் கேட்டேன் அவர் வெளிநாட்டில் இருப்பதாக கூறினார்கள். இது ஒரு தகவல் பரிமாற்றத்தினால் ஏற்பட்ட குளறுபடி இனி இது போல் நடக்காது.
இதை அறிந்த தமிழக முதல்வர் நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக் காக்க கூடியவர்கள் உங்கள் இருவருக்குள் இப்படி நடக்கக்கூடாது என்று கூறினார் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர் எங்க ஊர் காரர் என்று கூறிவிட்டேன். முதலில் அவரை நேரில் சென்று சரி செய்துவிட்டு சமாதானப்படுத்தி விட்டு வா என்று கூறினார். உடனடியா உங்கள் இருவருக்குள் எந்த வித பிரச்சனை இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இது கழகத்திற்கும் ஆட்சிக்கும் ஒரு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றார். என்னை விட இரண்டு மூன்று வயது சிறியவர்தான் சிவா, நான் தம்பி என்று தான் அழைப்பேன் முதலமைச்சரிடம் கேட்டபோது கூட நான் போய் இப்படிப்பட்ட வேலை எல்லாம் செய்வேனா என்று அவரிடம் கூறினேன். உடனே நீ சிவாவை நேரில் சந்தித்து திமுகவில் அவரும் ஒரு மூத்த தலைவர் பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வருபவர், அவருக்கு ஒரு அவமதிப்பு ஏற்பட்டு விட்டால் அது கழகத்திற்கு நல்லதா என்று கேள்வி எழுப்பினார்.
எனவே நான் அவரிடம் இன்று மாலை ஆறு மணிக்கு அவரை நேரில் சந்தித்து விட்டு நான் உங்களிடம் பேசுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அவரை வந்து பார்த்தேன் பேசினேன் எங்கள் இருவருடைய மனதிற்குள்ளும் இருந்ததை மனம் விட்டு பேசினோம். இனி இதுபோல் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டேன். நடக்கவும் கூடாது, நடக்கவும் நடக்காது என்று நான் கூறிவிட்டேன். நான் தடுமாறி தான் பேசுவேன் எம்.பி.சிவா நன்றாக பேசக் கூடியவர் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து எம்பி சிவா பேசுகையில், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக நடக்கட்டும் என்று தலைவருடைய குரல் எங்களுடைய செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கழக தலைவர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்த நாட்டை வழிநடத்தி வரும் நிலையில் அவருடைய மனம் சங்கடப்படும் அளவிற்கு எந்த காரியங்களும் நடந்த விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம். அவர் எடுத்த முயற்சியினால் அமைச்சர் நேரு என்னிடம் வந்து பேசி உள்ளார். நாங்கள் எங்களுக்குள் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அவருக்கு இந்த சம்பவத்தில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அவர் சொன்னார். அதை நான் ஏற்றுக்கொண்டேன், எங்களை பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி என்பது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பலதரப்பட்டவர்கள் இணைந்து பணியாற்ற கூடிய இந்த கழக ஆட்சியில் மற்றவர்களின் வளர்ச்சிக்காகவே எங்களுடைய செயல்பாடுகள் இனி இருக்கும். நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும் என்று கூறினார்.