ஜெனீவா- கொரோனா தொற்று குறித்த உண்மையான தரவுகளை பகிர்வதில், சீனா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் வூஹான் நகரில், 2019 டிசம்பர் இறுதியில், முதன் முதலில் கொரோனா பரவியது.
இந்த தொற்று, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொது மக்களுக்கு செலுத்தப்பட்ட பின் தான், பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
விசாரணை
கொரோனா பரவியதற்கான காரணம் குறித்து, உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக, சீனாவின் வூஹான் நகருக்கு சென்ற உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் பல முறை விசாரணை நடத்தினர்.
எனினும், கொரோனா தொற்றின் உண்மையான தரவுகளை, அந்த அமைப்பிடம் சீனா இதுவரை வழங்கவில்லை. உலக சுகாதார அமைப்பு பல முறை வலியுறுத்தியும், சீனா போக்கு காட்டி வருகிறது.
இந்நிலையில், ”கொரோ னா குறித்த உண்மையான தரவுகளை பகிர்வதில், சீனா வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்,” என, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் வலியுறுத்தி உள்ளார்.
மறுப்பு
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
சீன நோய் கட்டுப்பாடு மையம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகள், 2020ல் வூஹானில் உள்ள ஹுவானன் சந்தையில் எடுக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் தொடர்பானவை.
இவற்றை, பல விஞ்ஞானிகள் பதிவிறக்கம் செய்து பகுப்பாய்வு செய்தனர். இந்தத் தரவுகளை நாங்கள் கேட்ட போது, சீனா தர மறுக்கிறது. இதை ஏற்க முடியாது.
கொரோனா பரவல் குறித்த உண்மையான தரவுகளை பகிர்வதில் சீனா வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போது தான், கொரோனா தொற்று பரவியதற்கான உண்மையான காரணத்தை அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்