ஊட்டி: கோத்தகிரி அருகே நெடுகுளா கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மூன்றாவது மரபியல் பல்வகைமை கண்காட்சி நடந்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் மூன்றாவது மரபியல் பல்வகைமை கண்காட்சி நெடுகுளா கிராமத்தில் நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குநர் கருப்பசாமி தலைமை வகித்து கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அரங்கில் சிறு தானியங்கள், காய்கறி பயிர்கள், மூலிகை தாவரங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் கொய்மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் வேளாண்மை அறிவியல் நிலையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், செம்மறியாடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலையம், மத்திய நீர் மற்றும் மண்வள ஆராய்ச்சி மையம், தமிழக ஊரக புத்தாக்க திட்டம் (வாழ்ந்து காட்டுவோம்) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், வாசனை திரவிய பயிர்கள், உருளைகிழங்கு ரகங்கள், பலவகை மருத்துவ பயிர்கள், பழங்குடியின கைவினை பொருட்கள் மற்றும் சிறு தானிய பயிர்களான ராகி, சாமை, திணை, வரகு, கம்பு ஆகியவை காட்சிபடுத்தப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மாணிக்கவாசகம், பூர்வீக பயிர்களின் மகத்துவம் குறித்து விளக்கினார். செம்மறியாடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரேமா விவசாயத்தில் பாரம்பரிய கால்நடை இனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கோதுமை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி நஞ்சுண்டன் பாரம்பரிய சிறு தானிய பயிர்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் அபிஷேக் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். முன்னதாக கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா வரவேற்றார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கூடலூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.