திமுகவின் மாநிலங்களவை தலைவரும், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மற்றும் நாற்காலிகளை தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் ஆதரவாளர்களே அடித்து துவம்சம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த மார்ச் 15ம் தேதி நடந்த இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. இதனையடுத்து கட்சி சார்பில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், திருச்சி சிவாவை அமைச்சர் நேரு நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். சுமார் 10 நிமிடங்களாக நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் “நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.” எனக் கூறியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
அப்போது அமைச்சர் நேரு பேசியதன் விவரம்:
“எந்த ஊரில் என்ன நிகழ்ச்சி என்பது கூட எனக்கு தெரியாது. அதிகாரிகள் அழைக்கும் இடத்திற்கு நான் சென்று வருகிறேன். அப்படிதான் ராஜா காலணி பகுதிக்கும் சென்றேன். என்னுடைய திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதாலும் சென்றேன். அப்போது சிலர் திருச்சி சிவா பெயரை ஏன் நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை என கேட்டார்கள். அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என கூறிவிட்டு சென்றேன்.
நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு சம்பவம் நடந்த போது தெரியாது. தஞ்சை மாவட்டத்திற்கு சென்ற பின்னர்தான் தெரியும். communication gap-ல் இது போல் நடந்திருக்கிறது. கழக குடும்பத்தில் நடக்கக்கூடாத விஷயம் நடந்து விட்டது. சிவா எனக்கு தம்பி. சமாதானமாகி விட்டோம். எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
திருச்சி சிவாவை நேரில் சென்று சமாதானம் செய்யுங்கள் அப்போதுதான் மக்களுக்கு உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என தெரியும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். அதன்படியே நான் சந்தித்தேன். இனி இது போல் நடக்காது. எங்களை பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சிதான் முக்கியம். இருவரும் வெவ்வேறு பணிகளை செய்து வருகிறோம். அவை அனைத்தும் கழகத்தின் வளர்ச்சிக்கான பணிகள்தான்.” என கூறியிருந்தார்.
அவரை தொடர்ந்து பேசிய எம்.பி. திருச்சி சிவா, “நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நேருவின் பணியை என்னால் ஆற்ற முடியாது. என் பணியை அவரால் செய்ய முடியாது. நாங்கள் இருவரும் ஆற்றக்கூடிய பணி கட்சிக்கான வளர்ச்சிப் பணி” என்றார்.
முன்னதாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் எம்பி திருச்சி சிவாவின் வீட்டிற்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நேரு, எம்.பி. திருச்சி சிவாவின் முழு பேட்டியை காண:
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM