செகந்திராபாத் நகரில் 40 ஆண்டுகள் பழமையான ஸ்னப்ன லோக் வணிக வளாகம் உள்ளது. நகரின் மையப்பகுதியில் இந்த வணிக வளாகம் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில், நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென இந்த வணிக வளாகத்தின் 8- வது மாடியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இது மளமளவென 7, 6, 5 ஆகிய மாடிகளுக்குப் பரவியது. பலர் மாடிப்படிகள்வழியாக இறங்கி உயிர்தப்பினர். 8 -வது மாடியில் உள்ளஒரு தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண் டிருந்த 13 பேர் கட்டிடத்தை விட்டுவெளியேற முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனர். இதற்குள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் 8-வது மாடியில் சிக்கியவர்களைக் காப்பாற்றி காந்தி அரசு மருத்துவமனை மற்றும் யசோதா, அப்பல்லோ மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்தி, பிரமீளா, ஸ்ராவனி, வெண்ணிலா, திரிவேணி மற்றும் சிவா ஆகிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இறந்தவர்களில் 5 பேர் பெண்கள்.
சம்பவ இடத்திற்கு தெலங் கானா அமைச்சர்கள் முகமது அலி, தலசானி நிவாஸ் யாதவ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
இறந்தவர் களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.