சென்னை:தமிழகத்தில் கோடைமழை தொடங்கியுள்ளது. தென் சென்னையின் பல இடங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் பல இடங்களில் நேற்று முன்தினமும், நேற்றும்மழை பெய்தது. தென் சென்னைபகுதிகளான வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக்கண்டு ரசித்த குழந்தைகள் ஐஸ்கட்டிகளை சேகரித்தும்விளையாடியும் மகிழ்ந்தனர்.
மேடவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, உள்ளகரம் – புழுதிவாக்கம், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
கோடைமழை பெய்து வருவதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:
தற்போது தென்தமிழகம் முதல் மத்தியப் பிரதேசம் வரை கிழக்கு திசை காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக 18, 19, 20 ஆகியதேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கோடைமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை முகலிவாக்கம், பெருங்குடியில் 6 செமீ, மீனம்பாக்கம், ஆலந்தூரில் 5 செமீ, கோடம்பாக்கம், தரமணியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.