தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப்பூங்கா: பிரதமர் மோடி டிவிட்

புதுடெல்லி: தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட 7 மாநிலங்களில் மித்ரா மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களிலும் மித்ரா மெகா ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும். மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள், ஜவுளி துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும். கோடிக்கணக்கான  முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கும். மேக் இன் இந்தியா மற்றும் மேக் பார் தி வேல்ர்ட் என்பதற்கு ஒரு மிக சிறந்த உதாரணமாக மெகா ஜவுளி பூங்கா இருக்கும்.

மித்ரா மெகா ஜவுளி பூங்கா ஜவுளித்துறையை ஊக்குவிக்கும். 7மாநிலங்களில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படுகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது முகநூல் பக்கத்தில்,  ‘‘ரூ.4,445கோடி மதிப்பீட்டில் இந்த ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். ஜவுளித்துறையில் உள்கட்டமைப்புக்கான மிகப்பெரிய முயற்சி இதுவாகும். இந்த ஜவுளி பூங்காக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 லட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். மேலும் ரூ.70ஆயிரம் கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது”என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.