கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்தில் அலாரம் ஒலிப்பதாக எஸ்பிஐ வங்கியின் தலைமையிடத்தில் இருந்து சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் அங்கு சென்ற போது, கொள்ளையர்கள் இருவர் தப்பிச் சென்றதாக தெரிகிறது.
இதனையடுத்து ஏடிஎம் மையத்தை சோதனையிட்ட போது, அங்குள்ள மின்சார பெட்டியில் இருந்து மின்சாரத்தை எடுத்து கட்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தின் அடிபாகத்தை அறுத்தெடுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அலாரம் ஒலிக்கவே கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் கையுறை பயன்படுத்தி இருந்ததால் தடயங்களை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதோடு சிசிடிவி காட்சிகளை கொண்டு கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM