திடீரென ஏற்படும் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமா ?

இந்தியாவில் சமீப காலங்களில் ஏற்படும் திடீர் மாரடைப்பு வேகமாக அதிகரித்துள்ளது. முன்பு முதியவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. நல்ல உடல்நிலையில் இருக்கும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரை இழக்கிறார்கள். இதற்கிடையே மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்பது போன்ற தகவல்கள் பரவின.

இதற்கிடையே இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் பேர் மாரடைப்பால் மரணமடைவதாக ராஜ்யசபாவில் சுகாதாரத்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது. அதாவது, ஐ.சி.எம்.ஆர் ஆய்வு அறிக்கைகளின்படி, 1990ல் மாரடைப்பால் இறப்போர் 15.2 சதவீதமாக இருந்த நிலையில் 2023ல் 28.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2017-18ல் எடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, தினசரி புகை பிடிப்பவர்களில் 32.8 சதவீதம் பேருக்கும், மதுப் பழக்கம் உள்ளவர்களில் 15.9 சதவீதம் பேருக்கும், போதிய உடல் உழைப்பு இல்லாத 41.3 சதவீதம் பேருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. 30 முதல் 60 வயதுடையவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது கணிசமாக அதிகரித்துள்ளது’ என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மாரடைப்பு அதிகரிக்க கொரோனா தடுப்பூசியே காரணம் என்பது போன்ற தகவல்கள் பரவின. இது தொடர்பாக ஜனதா தளம் கட்சி எம்.பி., ராஜூ ரஞ்சன் சிங் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், திடீர் மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணம் என்பதற்கு எந்தவொரு அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை. கொரோனா காலத்திற்கு பிறகு அதிகளவு மாரடைப்பு ஏற்படுவது பற்றி தரவுகள் இல்லை. அது குறித்த எந்தவொரு ஆய்வுகளையும் ஐ.சி.எம்.ஆர் மேற்கொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று 2020-ல் இந்தியாவில் பரவிய நிலையில், 2021ஆம் ஆண்டு ஜன. முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் சுகாதார ஊழியர்கள். முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் கொரோனா வேக்சின் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் முதியவர்கள், இணை நோயாளிகள் என்று படிப்படியாக வேக்சின் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் உள்ளிட்ட பல வேக்சின்களுக்கு அனுமதி தரப்பட்ட போதிலும் பெரும்பாலும் கோவாக்சின், கோவிஷீல்ட் மூலமே வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.