அண்மையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீராவாணி மற்றும் பாடலாசிரியர் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக் கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் இந்திய சினிமா உலகம் மற்றும் ரசிகர்கள் திளைத்திருந்த நேரத்தில் மற்றொரு ஆஸ்கர் விருது ’தி எலிபன்ட் விஸ்பரஸ்’ என்ற இந்திய ஆவணப்படத்துக்கு கிடைத்தது. இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த படம் எடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம் முதுமலையில்.
அங்கு வசிக்கும் பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை ஆஸ்கர் விருதுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதுடன், காசோலையும் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து முதுமலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அவர்கள் அனைவரும் தவறாமல் பொம்மன் – பெல்லியை நேரில் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் திரைப்படத்தில் இருந்த இரண்டு யானைகளான ரகு மற்றும் பொம்மியை பார்க்கவும், அவற்றுடன் செல்பி எடுத்துக் கொள்ளவும் விரும்புகின்றனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பொம்மன் – பெல்லியை பார்த்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறி வருகின்றனர். மேலும் அவர்களுடன் கலந்துரையாடவும் செய்கின்றனர். இந்நிலையில், முதுமலைக்கு தர்மபுரியில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அந்த குட்டி யானையை பொம்மன் – பெல்லி இருவரும் பராமரிக்க உள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை புரிந்தபோது ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொம்மன் மற்றும் பெல்லியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.