பாஜக மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் தேசிய அளவில் கூட்டணிகள் குறித்த பேச்சு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிரான வலுவான ஒரே அணியை காங்கிரஸ் அமைக்குமா, காங்கிரஸை புறக்கணித்துவிட்டு மூன்றாம் அணி உருவாகுமா என்ற விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸை உள்ளடக்கிய ஒரே எதிர்கட்சி அணி தான் இருக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமியோ அதிமுக – பாஜக கூட்டணி மக்களவைத் தேர்தலில் தொடரும் என்கிறார். ஆனால் கள யதார்த்தம் இரு கட்சிகளும் உரசிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.
பாஜகவிலிருந்து அண்ணாமலையை மிக மோசமாக விமர்சித்துவிட்டு வெளியேறுபவர்களை சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்பது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை. ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை இணைக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. எனவே இரு தரப்பு ஆதரவாளர்களும் புகைப்படத்தை எரிப்பதும், உருவ பொம்மையை எதிர்ப்பதும் நடைபெற்றது.
டெல்லிக்கு தம்பிதுரையை அனுப்பி தங்கள் ஆதரவு உங்களுக்கே, எங்கள் நிலைப்பாடு இது தான் என்று எடப்பாடி பழனிசாமி மோடியிடம் சில தகவல்களை பாஸ் செய்துள்ளார். மோடி வரவேற்பளித்து பேசியது குறித்து பாசிட்டிவாக தம்பிதுரை எடப்பாடி பழனிசாமியிடம் கூற அவரும் உற்சாகமாகியுள்ளார். ‘ஆடு உறவு குட்டி பகை’ என்பதாக பாஜகவுடனான அதிமுக கூட்டணி சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
ஆனால் அண்ணாமலையோ அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் தலைவர் பதவியைக்கூட ராஜினாமா செய்துவிடுவேன் என்ற ரீதியில் பேசியுள்ளதாக சொல்கிறார்கள் சில தாமரை நிர்வாகிகள்.
சென்னைஅமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அண்ணாமலை தலைமையிபாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று திடீரென கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அப்போது தான் கூட்டணி விவகாரம் குறித்து பேசியுள்ளதாக சொல்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் நாம் வளர முடியாது. ஒருவேளை தலைமை கூட்டணியை தொடரும் என்றால் மாநிலத் தலைவராக இல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன் என்று ஆவேசமாக பேசியதாக சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இருந்தால் கூட்டணிக்கு அவர்கள் தான் தலைமை வகிப்பார்கள். அதற்கு பதிலாக அவர்களை தவிர்த்து விட்டு அமமுக, சசிகலா – பன்னீர், தேமுதிக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து நாம் கூட்டணிக்கு தலைமை வகிக்கலாம் என்று அண்ணாமலை கருதுவதாக சொல்கிறார்கள்.