தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் தன்னுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக
ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ் முன்பு தெரிவித்தார். போர்ன் பட நாயகியின் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தார். இந்தநிலையில் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்ற போது, போர்ன் நடிகையின் செய்திகள் வெளிவந்ததால் டிரம்பிற்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதியாக வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணமானது பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக டிரம்ப் மீது வழக்குகள் உள்ளது. இத்தகைய சூழலில் வருகிற செவ்வாய்கிழமை தான் கைது செய்யப்பட உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாது.
மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி, டிரம்ப் இன்று காலை தனது ட்ரூத் சமூக தளத்தில், “முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார்கள். போராட்டத்திற்கு தயாராகுங்கள்..” என்று எழுதியுள்ளார்.
மேலும் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்ட தனது பதிவில், “ஊழல் மற்றும் செல்வாக்கு மிக்க மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த சட்டவிரோதமான கசிவுகள்” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் வாக்கெடுப்புக்கு சில வாரங்களுக்கு முன் போர்ன் பட நடிகைக்கு $130,000 செலுத்திய விவகாரத்தில் டிரம்ப் கைது செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் டிரம்ப் மீது குற்றம் சாட்டலாமா என்று வழக்கறிஞர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் டிரம்ப் மீது குற்றம் சாட்டினால், 76 வயதான அவர் குற்றம் சாட்டப்பட்ட முதல் முன்னாள் அதிபராக மாறுவார். மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால், குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள டிரம்ப் சரணடைவார் என்று டிரம்பின் வழக்கறிஞர் நேற்று மாலை CNBC ஊடகத்திடம் கூறினார்.
முன்னதாக மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில், டிரம்ப் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் சூசன் நெசெல்ஸ், ஸ்டோர்மி டேனியல்ஸ் என்று அழைக்கப்படும் ஆபாச நட்சத்திரத்திற்கு பணம் செலுத்த பிரச்சார நிதி பயன்படுத்தப்படவில்லை, எனவே பிரச்சார நிதி சட்டங்களை மீறவில்லை என்று வாதிட்டார் என்பது குறிப்பிடதக்கது.