பிரதமர் அலுவலக அதிகாரி பெயரில் காஷ்மீரில் மோசடி செய்தவர் கைது – கூட்டாளிகள் 3 பேர் தலைமறைவு

ஸ்ரீநகர்: பிரதமர் அலுவலக அதிகாரி எனக் கூறி மோசடி செய்த நபரை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருடன் வந்த 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண்பாய் படேல். இவர் பிரதமரின் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக (திட்டமிடுதல் மற்றும்பிரச்சாரப்பிரிவு) பணியாற்றி வருவதாகக் கூறி காஷ்மீருக்கு இந்த ஆண்டு 2 முறை வந்துள்ளார்.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெர்ஜினியாவில் உள்ள காமன்வெல்த் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி. படித்துள்ளதாகவும், திருச்சி ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படித்துள்ளதாகவும், எம்.டெக், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளதாகவும், பி.இ.(கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்) படித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சிந்தனையாளர், திறன் மேம்பாட்டாளர், ஆய்வாளர், பிரச்சார மேலாளர் என்றும் கூறி வந்துள்ளார்.

பிரதமர் அலுவலக அதிகாரி என்பதால் அவரை, அங்குள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து குண்டு துளைக்காத காருடன் இசட் பிளஸ் பாதுகாப்பையும் காஷ்மீர் மாநில போலீஸார் வழங்கினர்.

மேலும் அவருக்குத் தேவையான வசதிகளை காஷ்மீர் அரசு அதிகாரிகள் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் அவர் ஸ்ரீநகர் வந்தபோது, அந்த மாநில அதிகாரிகளுடன் கிரண்பாய் படேல், ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் அவர் காஷ்மீரின் பல இடங்களை சுற்றி பார்த்துள்ளார். இது தொடர்பான தகவல்களை அவர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி மீண்டும் அவர் ஸ்ரீநகருக்கு வந்தார். பிரதமர் அலுவலக அதிகாரி அடிக்கடி காஷ்மீர் வருவது ஏன் என்று சந்தேகமடைந்த மாவட்ட ஆட்சியர் அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தார். விசாரணையில் அவர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று பொய் கூறி மோசடி செய்த விவகாரம் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் ரகசியமாக வைத்திருந்தன. இதனிடையே அவரை போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போதுதான் அவர் கைதான விவகாரம் வெளியே தெரிய வந்தது. தற்போது கிரண்பாய் படேல், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கிரண்பாய் படேலுடன் வந்த அவரது 3 நண்பர்கள் அமித் ஹிதேஷ் பாண்டியா (குஜராத்), ஜெய் சிதாப்பரா (குஜராத்), திரிலோக் சிங் (ராஜஸ்தான்) ஆகியோர் அவர் தங்கிய அதே 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். கிரண்பாய் படேல் கைதான விவகாரம் தெரியவந்ததும் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் காஷ்மீர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.