பீகார்: தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் பீகார் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர் தாக்கப்படுவதாக பொய்யான தகவல் பரப்பியவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையில் தமிழ்நாடு காவல்துறை களமிறங்கியுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு காவல்துறை 13 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த பீகாரை சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளார். தமிழ் நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோ பதிவிட்ட மணீஷ் காஷ்யப் மற்றும் அவரது கூட்டாளி யுவராஜ் சிங் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து.
கடந்த 15ம் தேதி அவர்கள் இருவருக்கும் சொந்தமான இடங்களில் பீகார் காவல்துறை சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் சரணடைத்திருக்கிறார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க பீகார் காவல்துறை திட்டமிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகாரில் மட்டும் 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.