திருவனந்தபுரம்: பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினால் சமூகத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று திருவனந்தபுரத்தில் நடந்த பெண்கள் சுய உதவிக்குழு வெள்ளி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். நேற்று காலை கொல்லம் வள்ளிக்காவில் உள்ள மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமத்திற்கு சென்று அங்கு அமிர்தானந்தமயியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் வந்த அவர் மகளிர் சுய உதவிக்குழுவான குடும்பஸ்ரீயின் வெள்ளி விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்ற பின்னர் முதன் முறையாக கேரளா வந்துள்ளேன். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கேரளா கடவுளின் தேசம். ஜகத்குரு ஆசி சங்கரர் இங்குதான் பிறந்தார். நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றும் குழுவில் இருந்த 15 பெண்களில் 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவின் உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி கேரளாவை சேர்ந்த அன்னா சாண்டி ஆவார்.
உச்சநீதிமன்றத்திலும் கேரளாவை சேர்ந்த பாத்திமா பீவிதான் முதல் பெண் நீதிபதியானார். சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை நஞ்சியம்மாவிற்கு வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
ஒரு பழங்குடியின பெண் என்ற நிலையில் நஞ்சியம்மா நம் நாட்டின் மற்ற பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாக விளங்குகிறார். பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினால் சமூகத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். நேற்று இரவு ஹயாத் ஒட்டலில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவர்னர் இரவு விருந்து வழங்கினார். முதல்வர் பினராய் விஜயன், அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஜாய், டிஜிபி அனில்காந்த் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர். இன்று காலை அவர் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் திருவனந்தபுரம் வரும் அவர் மதியம் லட்சத்தீவு புறப்பட்டு செல்கிறார்.