தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணி வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாராணை நாளை நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி அவசர வழக்கு தொடர ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 26ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில்
தரப்பு இறங்கியுள்ளது. இன்று அதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கோரினார். அவருக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர் அனுமதி கோரிய நிலையில் அவரும் அதற்கு அனுமதியளித்தார்.
இந்நிலையில் நாளை காலை பத்து மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனு மீது விசாரணை நடைபெறும்.
ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் மூலம் தடை பெறும் வேலையில் இறங்கியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.