நேபியேட்டோ: மியான்மரில் மடாலாயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மியான்மர் ராணுவ செய்தித் தொடர்பாளர் சா மின் துன் கூறும்போது, “நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, கரேனி நேஷனலிட்டிஸ் டிஃபென்ஸ் ஃபோர்ஸ் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் அங்கு நுழைந்தனர். பின்னர் கிளர்ச்சியாளர்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலே 22 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் புத்த பிச்சுகள்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்த கூடுதல் தகவல் எதையும் மியான்மர் ராணுவம் வெளியிடவில்லை. எனினும், இது இனப் படுகொலை நடவடிக்கையாக இருக்கு என்று மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு பொறுப்பேற்கவில்லை.
மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சியை 2021-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவ ஆட்சிக்குழு. இந்நிலையில், ஆங் சான் சூச்சி ஆதரவு தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் பிற தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமை அரசு (NUG) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல் தலைவராக உள்ள துவா லஷி லா தன்னை மியான்மரின் அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், துவா லஷி லா தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஜனநாயகத்திற்காக போராடிய 2,000 போராட்டக்காரர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக தரவுகள் தெரிவிப்பதும் நினைவுகூரத்தக்கது.