பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வட இந்திய கடை உரிமையாளர் மன்னிப்புக் கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனிடையே 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்ததால் தான் வாக்குவாதம் செய்தேன் தமிழன் வடக்கன் என்று பிரித்துப் பேசவில்லை என்று சேலத்தை சேர்ந்த இளைஞரும் கருத்து தெரிவித்துள்ளார்.
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரிச்சர்ட் விஜயகுமார் என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வட இந்தியர் நடத்தும் டீக்கடை ஒன்றில் சமோசா வாங்குவதற்காக பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்துள்ளார். அப்போது பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த கடை உரிமையாளர் ரிச்சர்டு விஜயகுமாரை கடுமையாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிரான கருத்துகள் எழத்தொடங்கின. இதனையடுத்து தான் செய்தது தவறு என்பதை உணர்ந்த வட இந்திய டீக்கடை உரிமையாளர் மன்னிப்புக் கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இனி பத்து ரூபாய் நாணயத்தை வாங்குகிறேன் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இளைஞரிடம் கடுமையாக வட இந்தியர் பேசிய விவகாரத்தை சில அரசியல் கட்சியினர் கையில் எடுக்க முயற்சித்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் ரிச்சர்ட் விஜயகுமார் தனது சமூக வலைதள பக்கங்களில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுத்ததற்காக தான் நான் அவருடன் வாக்குவாதம் செய்தேன். இதில், தமிழன், வடக்கன் என்று பிரித்துப் பேசவில்லை என பதிவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM