லண்டன் பேச்சு பற்றி ராகுலை விளக்கம் அளிக்க விடாமல் நாடாளுமன்றத்தில் பாஜ கடும் அமளி: 5வது நாளாக இரு அவைகளும் முடங்கின

புதுடெல்லி: லண்டன் பேச்சு குறித்த சர்ச்சைகளுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க ராகுல் காந்தி முன்வந்த போதிலும், அவரை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் கடும் அமளி செய்ததால், தொடர்ந்து 5வது நாளாக இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கிய நிலையில், லண்டனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பேசிய விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக ராகுல் மன்னிப்பு கேட்கக்கோரி பாஜ எம்பிக்கள் அமளி செய்வதால் தொடர்ந்து 4 நாட்களும் இரு அவைகளும் முடங்கின.

இதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி நேற்று முன்தினம் மக்களவை சபாநாயகரை சந்தித்த பின் பேட்டி அளித்தார். இதனால் ராகுல் இன்று அவையில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை காலையில் கூடியதும் பாஜ எம்பிக்கள் வழக்கம் போல் ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி அமளி செய்தனர். அப்போது, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல ஒன்றிய அமைச்சர்கள் அவையில் இருந்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள், ராகுலை பேச அனுமதிக்கும் படியும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் கூச்சலிட்டனர்.

தொடர்ந்து 20 நிமிடங்கள் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்களும், ராகுல் மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்களும் சேர்த்து 11 ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். இதனால் பாஜ எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் விளக்கம் அளிக்க முன்வந்தும், அவரை பேச விடாமல் பாஜ எம்பிக்கள் அமளி செய்ததன் காரணமாக, தொடர்ந்து 5வது நாளாக இரு அவைகளிலும் எந்த அலுவல்களும் நடக்காமல் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

* காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம்
அதானி விவகாரம் எம்பிக்கள் அடங்கிய கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா, ஜேஎம்எம், பிஆர்எஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.