காலங்கள் கடந்தபோதும், கலாசாரங்கள் மாறிய போதும் பெண்களின் மீதான வன்முறைகள் குறைந்தபாடில்லை. அதைவிட துயரமான உண்மை, அவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் வரதட்சணை, பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டுள்ள புகார்கள் அதிகரித்துள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், “கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில், வரதட்சணை மற்றும் பாலியல் வன்கொடுமை, பாலியல்கொடுமைக்கான முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் கமிஷனில் பெறப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்தில், வரதட்சணை குறித்த புகார்கள் 2022ம் ஆண்டில் 357ஆகவும், 2021ம் ஆண்டில் 341 ஆகவும், 2020ம் ஆண்டில் 330 ஆகவும் இருந்தது. பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமைக்கான முயற்சிகள் குறித்த புகார்கள் 2022ம் ஆண்டில் 1,710 ஆகவும், 2021ம் ஆண்டில் 1,681 மற்றும் 2020ம் ஆண்டில் 1,236 புகார்களும் பதிவாகி உள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.