தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் ஆர்.பி. சாலையில் 8 தளங்கள் கொண்ட ஸ்வப்னலோக் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டாவது மாடியில் இருந்து மளமளவென பரவிய தீ 7, 6, 5வது தளங்களுக்கும் பரவியது.
இந்த தீ விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க முயன்றனர். தீயின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என கருதிய அதிகாரிகள், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்தவர்களை வெளியேற்றினர்.
மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 7 பேரை மீட்டு காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நான்கு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அமைச்சர்கள் மஹ்மூத் அலி, தலசானி ஸ்ரீனிவாஸ், மேயர் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவர். உயிரிழந்தவர்கள் பிரமிளா, வெண்ணெலா, ஷ்ரவாணி, திரிவேணி, ஷிவா மற்றும் பிரசாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.