கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவரின் பெயரில், வங்கி லாக்கரில் வைத்திருந்த 4.5 கிலோ தங்கம், 24.5 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்களை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ் (53) இவரின் சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் (50). இவர்கள் இருவரும் கும்பகோணத்தில் நிதி நிறுவனம், கிரிஷ் என்ற பெயரில் பால்ப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்தனர். இவர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்ததால் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என கும்பகோணம் பகுதியில் அழைக்கப்பட்டனர்.
ஹெலிகாப்டர் பிரதர்ஸ், தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாக திருப்பி தரப்படும் என்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரகமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தனர். தொடக்கத்தில் சொன்னதை போலவே நாணயமாக பணத்தை திருப்பி கொடுத்தனர். இதனால் கும்பகோணம் பகுதியில் உள்ள செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், கடந்த 2021-ல் ஹெலிஹாப்டர் பிரதர்ஸ் தங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்து விட்டதாக கும்பகோணத்தை சேர்ந்த ஜபருல்லா- பைரோஜ்பானு தம்பதி மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளித்தனர். குழந்தைக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூக்கள் தூவி பிறந்தநாள் கொண்டாடியவர்கள், ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கென்றே சொந்தமாக இறங்கு தளம் அமைத்து ஆடம்பரமாக வலம் வந்த கோடிஸ்வரர்களான பிரதர்ஸ் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது கும்பகோணத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை தொடர்ந்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக ஹெலிகாப்டர் பிரதர்ஸ் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இதையடுத்து பா.ஜகவில் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஆர்.கணேஷை கட்சியிலிருந்து தலைமை நீக்கி நடவடிக்கை எடுத்ததாக சொல்லப்படுகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டும் வந்தனர். சிறையிலிருந்த எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் பல்வேறு வங்களில் கணக்கு தொடங்கி பணம், தங்க நகை உள்ளிட்டவற்றை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது. குறிப்பாக கும்பகோணத்தில் உள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தின் லாக்கர்களில் சொத்துக்களின் பத்திரம், தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்கள் இருப்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் கொண்ட போலீஸ் டீம் கும்பகோணம் பெரிய கடைத்தெரு மற்றும் டாக்டர் பெசன்ட் ரோட்டில் உள்ள கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் இரண்டு கிளைகளிலும் சோதனை நடத்தினர். இதில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் பெயரில் லாக்கரில் சுமார் 4.5 கிலோ தங்க நகை, 24.5 கிலோ வெள்ளி பொருள்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் பெயரில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை, வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்வதாக தெரிவித்தனர்.